என்னைப்பற்றி
ஹாய் ! வணக்கம் ….. உங்கள் வருகைக்கு நன்றி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpC-f_C75kvdSrbiAs98_6c0nv8uBZY9qOHXc_Qym2znO_5EC3Au21c5pRsgtunqMZQhUGvgGWjaJAy7aaEiQbpzWZ3Pq2JW7w1XYHYU0wBL361ynMrCG4c-rLA8GWf1RK_eWXFn3Xhf8Q/s320/Mathan.jpg)
கவிதை மற்றும் புகைப்படத்துறையில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம் அவ்வளவுதான் . அதிலும் கவிதை துறைக்குள் நான் நுழைந்தது ஒரு விபத்தென்றுதான் கூறவேண்டும் . அது நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு . இருப்பினும் சந்தர்ப்பவசத்தால் அதனுள் உள்வாங்கப்பட்டேன் என்பதால் இதைப்பற்றி அறியாமலும் என்னால் இருக்க முடியவில்லை .
அது ஒரு சுவாரஸ்யமான கதை எனக்குத் தெரிந்த எனது முதல் கவிதை மட்டக்களப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ' செங்கதிர் ' எனும் சஞ்சிகையில் வெளியானது . அதன் பின் நடந்த ஒரு நிகழ்வே கவிதை உலகத்தினுள் என்னை அழைத்துவந்தது . இருந்தாலும் பாடசாலைக் காலத்தில் தரம் 8 படிக்கும் போது நான் ஒரு கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியதாக சான்றிதழ்கள் கூறுகின்றன . அதில் என்ன எழுதியிருப்பேன் என்ற வினா என்னுள் அடிக்கடி வந்து போகும் . அதற்காக நான் 8 ஆம் தரத்திலிருந்தே கவிதை எழுதுவதாக கூறவருகிறேன் என தப்பாக நினைக்கவேண்டாம் . எப்படியாவது போட்டிக்கு ஒருவரை அனுப்பியாக வேண்டும் என்பதற்காக என்னை அனுப்பியீருப்பார்கள் ஏனென்றால் கவிதை பற்றியதான எதுவித புரிதல்களும் எனக்கு அப்போது இருக்கவில்லை . கவிதை தொடர்பான நுகரலும் எனக்குள் இருக்கவில்லை . என்றாலும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் மீது எனக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது . இப்போதும் அது குறையாமல் அப்படியே இருக்கிறது . ஒருவாறாக கவிதை உலகில் நானும் தவழத் தொடங்கினேன் . எனக்குள் ஒரு பழக்கம் எதைச் செய்தாலும் அதில் எனது அதிக உழைப்பை காட்டுவது . அதன் பயனாக 2010 இல் எனது தாதியக் கல்லூரிக் காலத்தில் முற்றுமுழுதாக கவிதைகளை மட்டுமே உள்ளடக்கமாக கொண்ட மாதாந்தச் சஞ்சிகையான ' கவிஞன் ' உருவானது . ( www.kavignan.com
) அதன் ஆசிரியர் நான் என்பதால் கவிதை பற்றிய அறிதல் எனக்கு அவசியமானது . கவிதைப்புலத்தை அறிய அதுவே வழிகோலியது . அதன் வாயிலாகக் கிடைத்த எழுத்தாளர்களுடைய தொடர்பு . சந்தித்த தருணங்கள் எல்லாமே எனது கவிதைப் புலச் சிந்தனைகளைத் தூண்டிய தருணங்கள் எனலாம் . அக்காலத்தில் தான் எனது முதல் கவிதை நூலான ' உயிரோவியம்' வெளியிட்டிருந்தேன்.
என்ன அலுப்பாயிருக்கிறதா சரி அது அப்படியே இருக்கட்டும் . புகைப்படத் துறை தற்போது ஒளிப்படம் என்பதே சரி என்கிறார்கள் அப்படியே கதைப்போம் . ஒளிப்படம் மீது எனக்கு சிறய வயதிலிருந்தே ஆசை . ஆனாலும் கமராவுக்கும் எனக்கும் ஏதோ ஏழுஜென்மப் பகை போலும் இரண்டு மூன்று கமராக்களைப் பழுதாக்கியூம் இறுதியாக அன்பளிப்பாய்க் கிடைத்த பெறுமதியான கமராவைக் களவு கொடுத்தும் இருக்கிறேன் . என்றாலும் கமரா புகைப்படம் மன்னிக்கவும் ஒளிப்படம் மீதான எனது ஆர்வம் குறைந்தபாடில்லை . அதற்கு அண்மையில்தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது . கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய புகைப்படப்போட்டியலில் மாகாணமட்டத்தில் எனக்கு முதலிடம் கிடைத்தது . மகிழ்வாய்த்தான் இருந்தது என்றாலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை ஏலவே பலமாக இருந்தது . இன்னமும் கவிதையிலும் சரி ஒளிப்படத்திலும் சரி கற்றுத்தான் ஆக வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு கவிதை எழுதும் போதும் ஒரு ஒளிப்படத்துக்காய் பல தடவைகள் சட்டரை அழுத்தும் போதும் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை .
வளமையாக எல்லோரும் சொல்வது தான் கற்றது கைம்மண்ளவு கல்லாதது உலகளவு .........
முயன்றால் முடியும் என்ற நம்பிக்கையில் எனது முயற்சிகள் சிலவற்றை உங்களுக்காகத் தொகுத்துள்ளேன் . படித்தும் பார்த்தும் சொல்லுங்கள் . நன்றாயிருந்தால் '' தொடர்பு '' மெனுவுக்குச் செல்லுங்கள் பிடிக்காவிட்டால் நேரத்தை வீணாக்காமல் நேராக '' குளோஸ் '' பட்டனை அழுத்துங்கள்