ஆ.மு.சி.வேலழகனின் செங்காந்தள் நூல்விமர்சனம்

Mathan | 9:18 AM | 0 comments

ஆ.மு.சி. வேலழகனைத் தெரியாத இலக்கிய ஆர்வலர் இருக்கமுடியாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல வகையான பல நூல்களை எமக்களித்தவர் கவிஞர். தீயும் தென்றலும், உருவங்கள் மானிடராய், வேலழகன் அரங்கக் கவிதைகள், விழியூம் வழியூம்,வரிசையில் இந்தச் செங்காந்தள். இது கவிஞர். செ.சிவானந்த தேவன் அவர்களுக்குச் சமர்ப்பனமாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் சொத்தாக வர்ணிக்கத்தக்க பெருங் கவிஞருள் ஒருவரான கவிஞர் திமிலைத் துமிலன் அவர்கள் இக்கவிதை நூலுக்கான அணிந்துரை வளங்கியிருப்பது இந் நூலுக்கு மேலும் அணிசேர்கின்றது.
        புதுக்கவிதைப் பக்கமே இதுவரைச் சாயாமல் கவிபுனையும் இவர் தொடர்ந்தும் அவ்வாறே பயணிப்பார் என்பது வாசகர் அறிந்ததே! அந்த வகையில் செங்கமலமும் மரவுக் கவிதைத் தொகுதியென்பதை நான் இன்னொரு முறை சொல்ல வேண்டிய தில்லை.
            xx +78  பக்கங்களைக் கொண்ட இத்தொகுதியின் விலை ரூ.130 மட்டுமே! 
மொத்தம் 32 தலைப்புகளில் பாடப்பட்டுள்ள கவிதைகளில் சிரிக்க சிந்திக்க வேண்டிய கவிதைகள் ஏராளம். அத்தனையும் சுவை மாறாது கூறியிருக்கின்றார் கவிஞர். அதிலே "இவர்களுக்கீடாகுமா" எனும் கவிதையிலே......
அகிலமென்றால் எனக்கு இங்கு
     அம்மா அப்பாதான் - பிற
அனைத்துமே எப்பொழுதும்
     சும்மா ஒப்பேதான்

என்ற வரிகள் நம் தாயை ஒருகணம் சிந்திக்க வைக்கின்றன. 

இதிலுள்ள  மற்றுமொரு கவிதை "கதிர மலைக்குப் புது யாத்திரை" இதிலே தற்போது புனிதப் பயணங்கள் மாறிய நிலையை எண்ணிக் கவிஞர் துவண்டெழுகின்றார். இதில் நோக்கலுக்குள்ளாக்க வேண்டிய விடயம் என்னவெனில் இதன் வடிவம். ஆங்கிலமும் தமிழும் ஒன்றிணைந்தும் எதுகை மோனை மாறாத கட்டமைப்பு பாராட்டப்படவேண்டியதே. இது தமிழ்க் கவிதை வடிவங்களில்  ஒரு வித்தியாசமாக பிரவேசம் எனலாம்.  
என்றாலும் இதில் வரும் ஒரு அடியில் 

காசி கூடப் போனாலும்
           கனக்கெல்ல ஓராளுக்கு
சீசி சேர் சொன்ன படி 
           சீ்ப்பே தான் பைதவுசன்
சுப்பர் படமாக 
            சுப்பஸ்ரார் நடித்ததுவாம்
அப்பாசி ரம்பா
             அட்டகாசமாய் நடித்த 
கொப்பிகள் கொஞ்சமேனும்
          கொண்டு பொக வேண்டுமங்கே!

என வருகிறது. இந்தக் கவிதை கவிஞரால் 16.03.1987  ஆம் ஆண்டு எழுதியதாகத் திகதியிடப்பட்டுள்ளதுதான் இங்கே சர்ச்சையை ஏற்படுத்தி நிற்கின்றது. இதன்போது கவிஞர் கூற வருவது என்ன? 1987 ஆம் ஆண்டே தான் இந்த யுத்தியைக் கையாண்டுள்ளதை வலியுறுத்தவா? இல்லை அது அச்சுப்பிழையா? ஏனென்றால் ரம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம்  கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். 1987 இல் கவிஞர் ரம்பாவை அறிய வாய்ப்பில்லை. அறிந்திருந்தாலும் அப்பாசி ரம்பா அட்டகாசமாய் நடித்த.... என்ற வசனங்கள் இடம்பெற வாய்ப்பில்லை. ஆக இந்த வடிவமைப்பு ஏலவே ஒருவரால் கையாளப்பட்டிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது. எனினும் அதை அடியொற்றிய கவிஞரின் படைப்புக்கு வாழ்த்துக்கள். (இப்புத்தகத்தில் போடப்பட்ட ஆண்டுகள் ?)
    இவரது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் பாடுபொருளாக.... போலித்தனம்,சுயநலம்,பேராசை,செய்ந்நன்றி கொல்லல், சுரண்டல்கள்,அநீதி,வன்செயல் போன்றனவே பிரதிபலிக்கின்றன.
ஆங்காங்கே மரபை மீறிச்சென்றாலும் சந்தம் மாறாத சுவை வாசகரை மகிழ்விக்கும் என்றே கூறலாம்.


தொடர்புகளுக்கு
கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்
தாமரைக்குழம்
தாழங்குடா.
மட்டக்களப்பு.
இலங்கை. 

- சபாபுத்திரன் - 

Category: , ,