மௌனமாய் பேசுகிறோம்...

Mathan | 9:32 AM | 0 comments


'ஹாய் தருண் நீண்ட நாளைக்குப் பிறகு... என்ன இந்தப் பக்கம்? ' 'ஒரு வேலையா வந்தன் மது ஆனா அது முடியல்ல அதுதான் திரும்பிட்டன் ' 'அது சரி நீ என்ன இந்தப் பக்கம்?' 'அது நான் கேட்க வேண்டிய கேள்வி... என் வீடு இங்கதானே! வாயேன் வீட்ட ஒரு கப் ரீ குடிச்சிற்றுப் போகலாம்...'
     என மதுவுக்கும் தருணுக்குமிடையான உரையாடல் தெருவழியே வீடுவரை உருண்டோடியது. மதுவும் தருணும் ஒரே அலுவலகத்தில் தொழில்புரியும் 30 பேர்களில் இருவர்.
    'அது தான் எனது மாளிகை' என தனது இயல்பான புன்னகையுடன் இயம்பினாள் மது. 
'வலது காலை எடுத்து வைத்து வரவா? ' என தனது குறும்புப் பதிலை கேள்வியாகவே கூறி உள்நுழைந்த தருணுக்கு மது தனது பெற்றோரை அறிமுகப்படுத்தினாள்.
 முற்றாய் முடிநரைத்த அம்மா, ஆங்காங்கே நரைத்து அழகான  அலங்காரமிட்ட சிகையுடன் சிரித்துப் பேசும் அப்பா. அமைதியான அம்மாவுக்கு அரசியல் ஆர்வமுடன் கணவன் கிடைத்திருப்பது காதலால் அல்ல பேசிமுடித்ததுதான். ஒரு அண்ணா அரசஊளியர், திருமணமே வேண்டாமென விரத்தியடைந்த ஒரு அக்கா இவற்றில் கடைக்குட்டியாய் இருபத்தியாறைத் தாண்டிக்கொண்டிருக்கும்  நான் என தனது குடும்ப சரிதத்தை சொல்லிமுடித்து பெருமூச்சிவ pட்டாள் மது. அன்றைய தினம் அண்ணா வேலை விடயமாய் கொழும்புக்கும் அக்கா வெளியேயும் சென்றிருந்ததால் வீடு அமைதியாகவே இருந்தது.மூ.மே தாவின் புத்தகங்களை மேசையில் பார்த்த பிறகுதான் மதுவுக்கும் கவிதையில் ஆர்வமிருப்பதை அறிந்துகொண்டான் தருண். வாசிக்க ஆரம்பிக்கும் முன்பே 
'வாங்க மகன், மகளோடு  வேலைசெய்றீங்களா? எப்படி சுகம்? ' என ஆரம்பித்து இலங்கைப் பொருளாதாரம் வளியாக அரசியலுக்குள் நுழைந்தார் மதுவின் அப்பா.ஓய்வு பெற்ற அரச ஊளியர் என்பதால் அரசியலை இலாபகமாக அறிந்திருந்தார். ஆனால் தருணுக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தமென்பதை அங்கு தருணைத் தவிர யாருமே அறிந்திருக்கவில்லை. இதற்கிடையில்  'ரீ எடுங்க தருண் ' என ட்றேயை நீட்டினாள் மது. சூடுடன் அருந்தும் பழக்கமில்லாததால் எடுத்து மீண்டும் மேசையில் வைத்து மதுவின் அப்பாவுடன் அரசியல் மேடையில் மீண்டும் இணைய ஆரம்பிக்கும் போது... 'இங்க கொஞ்சம் வாங்களன்' என சமயலறையிலிருந்து வந்த குரலுக்கு மதிப்பளித்தவராய் எழுந்து சென்றார் அப்பா.
    'பிறகு சொல்லுங்க தருண் லைவ் எல்லாம் எப்படிப் போகுது? அப்பா இப்படித்தான் ஏதாவது அலட்டிக்கொண்டிருப்பார். என பேச்சைத் தொடங்கினாள் மது. நீங்கதான் சொல்லணும் என பதிலை கேள்வியாகவே திருப்பினான் தருண்.
'எதைச் சொல்ல... என் மௌனப் பேச்சுவார்த்தைகளைச் சொல்லவா? இல்லை முடியவைக்க முடியாத என் நீண்ட இரவுகளைச்சொல்லவா? ' எனக் கூறும்போதே மதுவின் கண்கள் சற்றுக் கலங்கியதை தருண் கவனிக்காமலில்லை. 
    'என்ன மது ஏதும் பிரச்சினையா? என்னிடம் சொல்லமுடியாதா?' என சோகங்கலந்த ஆவலுடன் கேள்வி தொடுத்த தருணக்கு ' இப்ப முடியாது தருண் பிறகு போணில எல்லாம் விளக்கமாய் சொல்லுறன்' என்ற மதுவின் பதில்; தருணுக்கு இன்னும் ஆர்வத்தைக கூட்டியது. அதன்போது மீண்டும் சங்கமித்த மதுவின் அப்பா  '  ரீ யைக் குடிங்க மகன் ஆறிடும்' என்பதற்குப் பின்தான் ரீ பற்றிய நினைவு வர ஆறிய ரீயை ஆறாததுபோல் வைத்து வைத்துக் குடித்தான் தருண். விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல். குடித்து முடிந்ததும் 
'சரி அங்கிள் நான் பொயிற்று வாறன்' என எழுந்த தருணை ' சமச்சி முடிச்சிட்டன் சாப்பிட்டுத்துப் போகலாம் இருங்க மகன் என மதுவின் அம்மாவின் குரல் தடுக்க முயன்றது. ' இல்ல நான் பிறகொரு நாளைக்கு வாறன் அம்மா என விடைபெற்று தருண் புறப்பட்டான்.
மோட்டார் சைக்கிளின் சத்தத்துடனே மதுவின் பிரச்சினைகளும் ஒட்டியே அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தது.
மாலைவேளை தருணின் கைத்தொலைபேசி சிணுங்கியது அவன் எதிர்பார்த்திருந்த மதுவின் அழைப்பென்பதால் கவலை கலந்த ஆவல் அதிகரித்தது. கல்லூரிக் காலத்தில் மதுவைப் பலர் காதலித்தாலும் மது ஒரு திடமான முடிவெடுப்பளள் என்பதால் அப்போது அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை இருந்தும் சுமன் அதைப் புரிந்து கொள்ளாமல் பிரியாவிடை நாள் வரையும் மதுவை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்ததையும் தருண் அறியாமலில்லை. ஏன் இப்போது கூட சுமன் மதுவையே நினைத்துக் கொண்டிருப்பதை எத்தனையோ தடைவ சுமன் தருணிடம் கூறியிருக்கிறான். இவை அனைத்தும் இழைப்பைத் தொடர்வதற்கிடையில் தருணின் மனத்திரையில் ஒளிபரப்பாகி முடிந்த நிழற்படங்கள்.
 'ஹலோ... சொலலுங்க மது' என ஆரம்பித்தான் தருண். ' எப்படி இருக்கீங்க விட்டில எல்லோரும் சுகமா?' என மது பதில் மொழிய... ' அது இருக்கட்டும் என்ன பிரச்சினை என்று சொல்லுங்க' எனத் தொடர்ந்தான் தருண்.
    ' தருண் நான் ஒருத்தர லவ் பண்றன் தெரியுமா?
    ' நீங்களா நம்பவே முடியல... '
    'அது சரி என்ன பிரச்சன ஏன் வீட்டில விருப்பமில்லையா?
    'அப்படியில்ல.........' என இழுத்த மதுவை ' அப்ப வேற என்ன பிரச்சினை என தொடரவைத்தான் தருண்.
'நான் கல்லூரி காலத்தில இருந்தே லவ் பண்றன் ஆனா இப்ப அவர் என்னிடம் கதைக்கிறதே இல்ல நீண்ட நாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் கதைச்சன் அதுவும் சொஞ்ச நேரம்தான் சரியாகவே கதைக்க முடியல்ல அவருக்கு என்ன பிரச்சினையோ தெரியல்ல ஆனா எனக்குத் தெரியும் அவர் வேற ஒருத்தரையும் லவ் பண்ணையுமில்லை பண்ணவும் மாட்டாருண்ணு' எனத் தொடர்ந்த மதுவை, 'அது சரி அந்த அவரு யாரெண்டு இன்னும் சொல்லவே இல்லையே, யாரு சுமன்தானே?' என நகைச்சுவையாகக் கூறி மீண்டும் தனது வட்டத்திற்குள் கொண்டுவந்தான் தருண்.
'சீ... உனக்கென்ன பைத்தியமா?'
'அப்படியெண்டா வேற யாரு?'
'அவர உங்களுக்கும் தெரியும்' என வெட்கப்பட்டவளாகவே பதில் கூறினாள் மது.
'யார் அந்த அதிஸ்டசாலி எனக்குத் தெரிந்தவரா?' என அறிய ஆவலோடு விசாரித்தான் தருண்.
'சொல்றன் ஆனா ஒருத்தர்கிட்டையும் சொல்லக்கூடாது' என நிபந்தனைகளுடன் மது கூறிய பெயரைக் கேட்டதும் சந்தோசத்தைவிட அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேலோங்கியதில் தருணுக்கு என்ன கதைப்பதென்றே ஒரு கணம் தெரியாமல்போனது.
எனினும் தருண் தனது காலச்சக்கரத்தை ஒரு வருடம் முன்னோக்கிச் சுழற்றியவனாய் மௌனமாகவே இருந்தான்.
    'நரேன் என்னடா ஒரே கவலையா இருக்கா, இதுக்கு முன் நான் உன்ன இப்படி ஒருநாளும் பார்க்கவே இல்லையே! என்ன ஏதும் பிரச்சனையா?' என்றவாறே வீட்டினுள் கவலையுடன் உட்காந்திருந்த நரேனை நெருங்கினான் தருண். இருவருமே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். நரேன் மினவும் அமைதியானவன். சந்தோசங்களைமட்டுமே பகிர்ந்து கொள்ளும் சுபாவமுடையவன். துக்கங்களை தனக்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்துவிடுவான். 
'ஆமாண்டா தருண் நான் லவ் பண்ர விசயம் உனக்குத் தெரியும் தானே!'
'ஓ... அதற்கென்ன, நீதான் உன்ட தேவதைய யாரெண்டு சொல்லமாட்டன் தெரியும் போது தெரியும் என்று ஒத்தக்காலில நிக்கிறியே! பிறகும் பிறகும் யாரெண்டு கேட்க நானென்ன இவனா' என சலிப்புடன் கூறிய தருண் மீண்டும் தொடர்ந்தான்.
    'இப்ப என்னடா பிரச்சினை அதையாவது  சொல்லு'
'நான் லவ் பண்ற விசயம் எங்க வீட்டில தெரிஞ்சி பொயிட்டுடா! எனக்கு சப்போட்டா எங்க குடும்பத்தில இருந்த ஒரே ஒரு ஆளெண்டா எங்க அம்மாதாண்டா! அம்மா இறந்த பிறகு ....' எனக் கூறி முடிக்க முடியாதவனை அழுகை அரவணைத்துக் கொண்டது.
' ஏன்டா நரேன் அழுறா மரணமில்லாத வீடுகள் இந்த உலகத்தில் எங்கேயாவது இருக்கா சொல்லு? நீயே இப்படி அழலாமா சொல்லு!'
'அது இல்லடா தருண்.  நான் லவ் பண்ரது வீட்டில அக்கா அவங்களுக்குப் பிடிக்கல்லடா! எனக்கு யாருமே இல்லண்டு நினைக்கயில என்னால அழாம இருக்கமுடியலடா!' என்ற நரேனை , ஏன் நாங்களெல்லாம் உனக்கில்லையா என்ற தருணின் வார்த்தைகள் ஓரளவு திடப்படுத்தின.
'ஆரம்பத்தில எல்லா வீட்டிலையும் இப்படித்தான் நரேன், போகப்போக சரியாகிடும். உங்க அண்ணா இருக்காருதானே! அவரும் லவ் பண்ணித்தானே திருமணம் செய்தவர் அதனால உனக்கு சப்போட் பண்ணுவார்தானேடா! ஏன் கவலப்படுறா'
    அப்படித்தான் தருண் நானும் இவ்வளவு நாளா நினச்சிட்டிருந்தன். ஆனா அது ஒன்றுமே நடக்கல்லடா! அவரும் எனக்கு சப்போட்டில்லடா!' என்ற நரேனின் பதில் தருணையே சற்று கவலையடையச் செய்யத் தவறவில்லை.
    'அதுதான் என்ன முடிவெடுக்கிற என்று ஒண்ணுமே தெரியல்லடா! அவக்கிட்டயும் நான் சரியா பேசமுடியல்லடா! இப்ப நானொரு குடும்பச் சிறையின் கைதிடா தருண்' என்று தனது சோகங்களைக் கூறியாலும்  எதிர்காலம் கருதியோ என்னவோ தனது காதலி யார் என்பதை ஒரு விடுகதையாகவே பேணிவந்தான் நரேன்.
    'இப்ப முடிவா உங்க அக்கா அண்ணா எல்லாரும் என்னதாண்டா சொல்லுறாங்க' என நரேனின் குடும்பத்துடன் வெறுப்புணர்வு கொண்டவனாய் வினவினான் தருண்.
' அவ வேலை செய்யிறது எங்க குடும்பத்திற்கு பிடிக்கல்லடா. வேலைய விடோனுமாம்! 
' இது தானா உன்ர பிரச்சின அவ வேலையை விட்டா சரிதானே பிறகென்ன பிரச்சின?'
'இத எப்படிடா நான் அவளிட்ட சொல்லமுடியும் அந்த வேல அவளுக்கு உயிர், அவ வேலசெய்யிறது தெரிஞ்சிதானேடா நான் லவ்பண்ணினன் அது மட்டுமில்லடா தருண் வீட்ட சீதனமும் எதிர்பாக்கிறாங்கடா'
'என்ன சீதனமா? என்னடா சொல்றா, நீங்க காதலிக்கிறது திருமணமெண்டு வந்தா சீதனம் கேக்கிறது என்னடா நினச்சிருக்கீங்க.. போடா.....' என சலித்துக் கொண்டவனாய்நரேனுடன் கோபமாய்ப் புறப்பட்ட தருணை ' எனக்கும் தெரியுமடா இதெல்லாம் எனக்கும் விருப்பமில்லதான் ஆனா அக்கா அண்ணாவோட சொல்லையும் மீறேலாத நிலமயில இருக்கண்டா! இதனாலதான் அவயோடயும் சரியா பேசுறதே இல்லடா!'
'மகளுக்கு சீதனம் கொடுக்க அவங்கட அப்பா விரும்பினாலும் வாங்க எனக்கும் விருப்பமில்ல வேலையை விடச்சொல்லவும் முடியாதுடா! இன்னும் நிறைய பிரச்சன, இதெல்லாம் வச்சித்தாண்டா நான் அவளுக்கு ஃபோனே எடுக்கிறல்ல. என்ன பிழையா நினைக்கிறாளோ தெரியல்ல' என்ற நரேனின் பரிதாபமான வார்த்தைகள்தருணின் கோபத்தை தணிய வைத்தது. எனினும் நரேன் அவளையே நினைத்துக் கொண்டிருப்பதை தருணால் உணரமுடிந்தது. நரேனின் காதல்  எப்படியாயினும் திருமணத்தில்தான் முடியவேண்டும் என மனதில் நினைத்தவனாய்...
'சரிடா எல்லாம் சரிவரும் நீ இருந்து பாரேன்' என விடைபெற்ற அந்த நாட்கள் பற்றிய நினைவுகளை................. 'என்ன தருண் சத்தத்தையே காணல்ல' என்ற மதுவின் வார்த்தைகள் தான் தருணை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தன.
'ஹலோ... ஹலோ......... எனப் பலமுறை கூறியும் மதுவிடமிருந்து பதில் வரவில்லை. அப்போது தருணின் ஃபோண் வெற்றி தீர்ந்து மூர்ச்சையாகியிருந்தததை அவன் அறிந்திருக்கவில்லை.
    மது , நரேன் ஆகியோரின் மௌன உரையாடல்களை புரிந்து கொண்டவனாய், நரேனுக்கு அழைப்பை ஏற்படுத்த முயன்றவனுக்கு 'இவ்வழைப்பைப் பூர்த்தி செய்ய உங்கள் கணக்கில் மீதி போதாதுள்ளது' என்ற இலத்திரன் குயிலின் குரல் ஏமாற்றத்தையே கொடுத்தது. ஃபோனை வைத்து விட்டுத் திரும்பிய தருணுக்கு ' எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்' என்ற கீதாசார வார்த்தைகள் சற்றுத் தடிப்பாகவே தெரிந்தது. இருந்தும் உண்மைக்காதல் உறங்காதென்பதை மது,நரேன் இவர்களுடன் தருணும் உணராமலில்லை.

Category: